search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போப் ஆண்டவர்"

    குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை எனக்கு நினைவூட்டுகிறது என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். #PopFrancis
    வாடிகன் சிட்டி:

    குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச மாநாடு வாடிகனில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களை சேர்ந்த பேராயர்கள் மற்றும் பாதிரியார்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் சாத்தானின் கருவிகள் ஆவர். தற்போது நடைபெற்று வரும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்கள், பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை எனக்கு நினைவூட்டுகிறது. இது மிகவும் வேதனை தரக்கூடியது.

    பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஒவ்வொரு வழக்கும் மிக தீவிரமாக விசாரிக்கப்படும். பேராயர்கள் தங்கள் தேவாலயங்களில் உள்ள பல்வேறு விதிமுறைகளை ஆய்வு செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் வலுவான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். #PopeFrancis #UAE
    அபுதாபி:

    கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் வாடிகனில் உள்ளது. இதன் தலைவராக போப் ஆண்டவர் உள்ளார். அமீரகத்தில் இந்த (2019) ஆண்டு சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்தார்.

    இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட போப் ஆண்டவர் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் “மதங்களுக்கு இடையிலான உறவின் வரலாற்றில், ஒரு புதிய பக்கத்தில் உங்களின் நேசமிக்க தேசத்தில் எழுதுகிறேன். நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரர் கள்தான்” என தெரிவித்தார்.



    அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தொடங்கினார். வாடிகனில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் அபுதாபி விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான், போப் ஆண்டவர் பிரான்சிசை நேரில் வரவேற்றார்.

    நேற்று காலை போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து அவர் அரண்மனைக்கு சென்று அரச குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது அவருக்கு அரண்மனை வாயிலில் துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து அங்குள்ள ஒரு மைதானத்தில் சிறப்பு பிரார்த்தனை (திருப்பலி) நடத்துகிறார். இதில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த பயணத்தின் போது போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஏமன் உள்நாட்டு போர் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் அவர் ஐக்கிய அரபு அமீரக பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ஏமன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருந்தார்.

    இது பற்றி அவர் கூறுகையில், “ஏமனில் நடைபெறும் நீண்டகால உள்நாட்டு போரில் அந்நாட்டு மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் அழிந்துவிட்டனர். குழந்தைகள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களின் அழுகை சத்தம் இறைவனை சென்றடைந்துள்ளது. எனவே இதற்கு உடனடி தீர்வுகாண அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.

    ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையில் ஐக்கிய அரபு அமீரகம் அங்கம்வகிப்பது குறிப்பிடத்தக்கது.  #PopeFrancis #UAE 
    வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. #Pope #PrayApp
    வாடிகன்சிட்டி:

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன்சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று பிரார்த்தனை நடத்தினார். அதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது பிரார்த்தனைக்காக ‘டேப்லெட்’டில் ‘கிளிக் டூ பிரே’ என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் உலக அமைதி மற்றும் இயற்கை பேரிடரில் இருந்து மக்களை காப்பாற்றவும் பிரார்த்தனை செய்தார்.

    இந்த செயலி மூலம் வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட முடியும். இந்த செயலியை தொடங்கி வைக்கும் முன்பு போப் ஆண்டவர் பேசினார்.



    அப்போது “எனது மனதில் 2 வலிகள் ஏற்பட்டுள்ளன. அது கொலம்பியா மற்றும் மத்திய தரைக்கடல் பிரச்சினைகளாகும். லிபியா மற்றும் மொரர்கோ நாடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் பிழைப்பு தேடி அகதிகளாக தஞ்சம் பிழைக்க படகில் சென்றபோது மத்திய தரைக்கடலில் மூழ்கினர். அவர்களில் 170 பேர் உயிரிழந்தனர்.

    அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். கொலம்பியாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களுக்காகவும், உலகில் அமைதி நிலவவும் பிரார்த்தனை செய்வோம்” என்றார்.

    இதற்கிடையே வாடிகன் நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் (https://www.clicktopray.org/en/user/popefrancis) என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொண்டால் போப் ஆண்டவருடன் பிரார்த்தனையில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pope #PrayApp
    கத்தோலிக்க திருச்சபையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த போப் ஆண்டவர் 6-ம் பாலுக்கு நாளை புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. #pope

    வாடிகன்:

    கத்தோலிக்க திருச்சபையின் 262-வது போப் ஆண்டவராக பதவி வகித்தவர் 6-ம் பால். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என அனைத்து கண்டங்களுக்கும் பயணம் செய்த முதல் போப் ஆண்டவர் 6-ம் பால். 1964-ல் பம்பாயில் நடைபெற்ற நற்கருணை மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார். இவரை, அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் வரவேற்றனர்.

    கத்தோலிக்க திருச்சபையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த 2-ம் வத்திக்கான் சங்கத்தின் தீர்மானங்களுக்கு காரணமாக இருந்தவர் போப் 6-ம் பால். கத்தோலிக்க திருச்சபையில் தாய்மொழி வழிபாட்டையும், விழா கொண்டாட்டங்களில் புதிய நடைமுறையையும் இவர் அறிமுகம் செய்தார். கருக்கலைப்பு உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 1968-ல் 6-ம் பால் வெளியிட்ட சுற்றுமடல் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

    1970-ம் ஆண்டு பிலிப் பைன்ஸ் நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், இவரைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்தன. அதன் பிறகு, பல ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தப் பாதையில் வழிநடத்திய போப் 6-ம் பால், 1978 ஆகஸ்ட்டு 6-ந் தேதி மரணம் அடைந்தார்.

    2012-ல் போப் 16-ம் பெனடிக்ட்டால் வணக்கத்திற்கு உரியவராக அறிவிக்கப்பட்ட இவரை, 2014-ல் போப் பிரான்சிஸ் அருளாளராக உயர்த்தினார்.

    2014-ம் ஆண்டு இத்தாலியின் வெரோனா பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியின் 5 மாத கரு, போப் 6-ம் பாலிடம் வேண்டியதால் உயிர் பிழைத்தது மருத்துவ அற்புதமாக கருதப்படுகிறது.

    இந்த அற்புதத்தை அங்கீகரித்துள்ள போப் பிரான்சிஸ், வாடிகனில் நாளை நடைபெறும் விழாவில் போப் 6-ம் பாலுக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார். எல் சால்வதார் நாட்டில் மனித உரிமைக்காக குரல் கொடுத்ததால் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போராயர் ஆஸ்கர் ரொமேரோ உள்பட மேலும் 6 பேருக்கும் நாளை புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. #pope

    ×